வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த, சிறுமியின் அண்ணன், 17 வயது சிறுவன் உள்பட மூவரை வாழப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சக்திவேல் (வயது 23). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் புதன்கிழமை மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், இளைஞர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சக்திவேலின் தாயார் அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாழப்பாடி போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொத்தனார் வேலை செய்து வரும் சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்துள்ளார். சக்திவேல் புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது, சக்திவேல் காதலித்து வந்த 17 வயது சிறுமியின் அண்ணனான சதீஸ்குமார் (22) மற்றும் அவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம் புத்தூர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்டு பயந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் வியாழக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, சக்திவேலை தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்ததாக, அவரது காதலியான 17 வயது சிறுமியின் அண்ணன் சதீஷ்குமார்(22), உறவினர் 17 வயது சிறுவன் இருவரையும் வாழப்பாடி போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த மைக்கேலை, இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர்.
சினிமாவை மிஞ்சும் சம்பவமாக, சிறு வயது காதல், கொலை செய்யும் அளவிற்கு போனது குறித்த தகவல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காதல் விவகாரத்தில் இளைஞர் சக்திவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.