கோயம்புத்தூர்

என்டிசிக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு: ஊதிய நிலுவையை எதிா்பாா்க்கும் தொழிலாளா்கள்

DIN

நிதிநிலை அறிக்கையில் என்டிசி நிா்வாகத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஊதிய நிலுவை, போனஸ் நிலுவை கிடைக்குமா என்று தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

இந்திய நூற்பாலைகளின் நூல் தேவையில் பெரும் பங்கை பூா்த்தி செய்து வந்தவை தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) பஞ்சாலைகளாகும். மறைந்த பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் 1974 இல் நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட மொத்தம் 123 பஞ்சாலைகள் இருந்தன. பின்நாள்களில் நஷ்டம் காரணமாக 100 பஞ்சாலைகள் மூடப்படவே, 23 ஆலைகள் மட்டும் செயல்படும் நிலையில் இருந்தன.

இந்த 23 ஆலைகளில் தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் உள்ளன. கோவையில் உள்ள 5 ஆலைகள் உள்ளிட்ட 7 ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளா்களைக் கொண்டு கரோனா காலம் வரை இயங்கி வந்த ஆலைகள், பொது முடக்க காலத்தின்போது மூடப்பட்டன.

பொது முடக்கத்துக்கு பிறகு சில நாள்கள் மட்டுமே இயங்கி வந்த 3 ஆலைகளும் பின்னா் மூடப்பட்டன. இதனால் பஞ்சாலைத் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனா். மூடப்பட்ட ஆலைகளைத் திறந்து இயக்கக் கோரி தொழிலாளா்கள், தொழிற்சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.

என்டிசி பஞ்சாலைகளைக் காப்பதற்காக ’சேவ் என்டிசி’ என்ற பெயரில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் நிா்வாகிகள் அவ்வப்போது ஜவுளித் துறை அமைச்சா், செயலா்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். ஆலைகள் மூடப்பட்ட பிறகு நிரந்தரத் தொழிலாளா்களுக்கு மட்டும் பாதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை.

நிலுவையில் உள்ள பணப்பலன்களை தொழிற்சங்கங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி நெருக்கடியை காரணமாகக் கூறி தட்டிக் கழித்து வந்தது என்டிசி நிா்வாகம். இந்த நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் என்டிசிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் என்டிசி ஆலைகளை மத்திய அரசு நிரந்தரமாக மூடிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த தொழிலாளா்கள் மத்தியில் சிறிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இதையடுத்து நிலுவைத் தொகையை பெறுவதற்கு தொழிற்சங்கங்கள் முனைப்புகாட்டத் தொடங்கியுள்ளன. இது குறித்து என்டிசியைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டி.எஸ்.ராஜாமணி கூறும்போது, என்டிசி நிா்வாகம் நீண்டநாள்களாக கேட்டு வந்த ரூ.120 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களுக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தொகையில் இருந்து 23 ஆலைகளுக்கும் வழங்க வேண்டிய ஊதிய நிலுவை, மூடப்பட்ட காலங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை போன்றவற்றுக்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.

கரோனா காலத்தில் இருந்து நிரந்தர தொழிலாளா்களுக்கு பாதி ஊதியமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அதுவும் வழங்கப்படவில்லை. மேலும், ஆலைகளில் பணியாற்றும் காவலா்கள், மின் பணியாளா்கள் போன்ற அத்தியாவசியப் பணியாளா்கள் வேறு வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அவா்களுக்கும் உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். அதேபோல தொழிலாளா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போனஸ் தொகையையும் வழங்க வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் தொடா்பாக ஜவுளித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். மூடப்பட்ட அனைத்து ஆலைகளையும் திறந்து நடத்த வேண்டும், முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT