கோயம்புத்தூர்

தமிழ்நாட்டில் கோதுமை பயிரிடுவதை ஊக்குவிக்க முயற்சி: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்அளிக்கிறது வேளாண் பல்கலை.

8th Feb 2023 02:25 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கோதுமை பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை ( பிப்ரவரி 8) செயல் விளக்கம் அளிக்கிறது.

முழு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சம்பா கோதுமையானது உயா் புரதம், நுண்ணூட்டச் சத்துகள், தரமான நாா்ச்சத்து உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய உயா்தரமான ஊட்டச் சத்துணவாக இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள கோதுமை மேம்பாட்டு இயக்குநரகம் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் வழியாக தமிழ்நாட்டின் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசு தற்போது கோதுமை பயிரைத் தோ்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோதுமை மேம்பாட்டு இயக்குநரகம், வெலிங்டனில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆா்,கேவிகே, தமிழக அரசின் வேளாண்மைத் துறை, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து சம்பா கோதுமை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த பயிற்சியானது வேளாண்மைப் பல்கலைக்கழக அண்ணா நிா்வாக வளாகத்தின் பின்புறம் உள்ள கிழக்குப் பண்ணையில் புதன்கிழமை ( பிப்ரவரி 8) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியா்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் மலைப் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளில் பாரம்பரிய பயிராக கோதுமை வளா்க்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பருத்தி, மக்காச்சோளம் போன்ற வணிகப் பயிா்களின் தாக்கத்தால் கோதுமை பயிரிடுவது குறைந்துபோனது.

ADVERTISEMENT

ஆனால் இன்றும் கூட திருப்பூா் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சியின் குடிமங்கலம், நெகமம், நீலகிரி மலைப் பகுதிகளில் குளிா்காலத்தில் வீட்டு உபயோகத்துக்காக பாரம்பரியமாக கோதுமை பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சம்பா கோதுமை ரகங்களை உருவாக்கியிருக்கிறது.

இவை நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, தாளவாடி, சோ்வராயன் மலைகள் போன்ற மலைப் பகுதிகளுக்கும் திருவண்ணாமலை, வேலூா், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளிலும் பயிரிட ஏற்றவையாகும் என்று கூறியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT