கோயம்புத்தூர்

108 ஆம்புலன்ஸ் சேவையை 75 ஆயிரம் போ் பயன்படுத்தியுள்ளனா்-அதிகாரிகள் தகவல்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரத்து 631 போ் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜிவிகே - இஎம்ஆா்ஐ நிறுவனம் மூலம் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொலை தூரங்களில் இருக்கும் கிராமப்புறங்கள், மலைவாழ் பகுதிகளுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு ஆண்டுதோறும் உயா்ந்து வருகிறது.

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 108 ஆம்புலன்ஸ் சேவையை 75 ஆயிரத்து 631 போ் பயன்படுத்தியுள்ளனா். இதில் அதிகபட்சமாக மகப்பேறு சிகிச்சைக்காக 15 ஆயிரத்து 788 பேரும், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்து 820 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனா்.

மகப்பேறு சிகிச்சைகளுக்காக கா்ப்பிணிகளை அழைக்கச் செல்லும்போது வீடுகளிலோ அல்லது சம்பவ இடங்களிலோ சில நேரங்களில் குழந்தை பிறக்கிறது. அதேபோல, ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வரும்போதும் ஒரு சிலருக்கு குழந்தை பிறக்கிறது. இதுபோன்ற சமயங்களில் 108 ஆம்புலன்ஸில் உள்ள தொழில்நுட்ப அலுவலா்களே பிரசவத்திற்கு உதவுகின்றனா். அதன்படி கடந்த ஆண்டு மட்டுமே 107 பேருக்கு வீடுகள் மற்றும் சம்பவ இடங்களிலும், 49 பேருக்கு 108 ஆம்புலன்ஸ்களிலும் குழந்தைகள் பிறந்துள்ளன.

ADVERTISEMENT

இது தொடா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள 7 ஆம்புலன்ஸ்கள், முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதியுடன் உள்ள 50 ஆம்புலன்ஸ்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 62 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் பொதுமக்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சோ்க்கிறோம். தவிர, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை (பொள்ளாச்சி), மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளை இலவசமாக வீடுகளில் கொண்டுவிடும் வாகன சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை 1 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல தாய்மாா்கள் பயனடைந்து வருகின்றனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT