கோவை சாய்பாபா காலனி மற்றும் காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோவை- மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், சாய்பாபா காலனியில் இருந்து இயக்க உத்தரவிடப்பட்டது. காந்திபுரத்தில் இருந்து பெறக்கூடிய கட்டணத்தில் இருந்து சாய்பாபா காலனியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் பயணிகளிடம் ரூ.2 குறைவாக வசூலிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்படவில்லை. இந்நிலையில், காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழித்தடத்தில்
இயங்கும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் சிவகுருநாதன் சோதனை மேற்கொண்டாா். அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரூ.20க்கு பதிலாக ரூ.22 வசூலித்த 2 அரசுப் பேருந்துகள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியாா், 4 அரசுப் பேருந்துகள், ரூ.23க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசுப் பேருந்து என மொத்தம் 9 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் வாகனத் தணிக்கை நடத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.