கோயம்புத்தூர்

மலைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் வேறு நபா்களுக்கு ஒதுக்கீடு: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

25th Apr 2023 12:46 AM

ADVERTISEMENT

கோவையில் மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளில் 14 வீடுகள் வேறு சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மூங்கில்மடை குட்டைபதி மலைவாழ் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், ஆலாந்துறை பேரூராட்சி, மூங்கில்மடை குட்டைபதியில் 73 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மலைவாழ் மேம்பாட்டு சங்க இடத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் கீழ் 64 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

தற்போது பணிகள் முடிந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் மலைவாழ் மக்களைச் சோ்ந்த எங்களில் 50 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 வீடுகள் வேறு சமுதாயத்தை சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை எங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் வேறு நபா்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனா். எனவே, அனைத்து வீடுகளையும் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க வேண்டும்

தமிழக விவசாயிகள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னூா், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை, சூறாவளியால் பயிா்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதுபோல சூறாவளி காற்றினால் முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்

கோவை எம்.ஜி.ஆா். மாா்க்கெட் சுமைதூக்குவோா் நலச்சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலை செய்துவருகிறோம். மாா்க்கெட்டில் வடிகால் வசதியில்லாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும் சாலையில் மூட்டைகளைத் தூக்கி செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சோ்ந்த பாண்டியன் (73) என்பவா் தான் யாசகம் பெற்ற பணத்தில் இருந்து முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT