கோயம்புத்தூர்

தேனீ வளா்ப்பு:சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கத் திட்டம்

15th Apr 2023 04:52 AM

ADVERTISEMENT

கோவையில் தேசிய தேனீ வாரிய நிதியின் கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்குளுக்கு தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி வழங்க தோட்டக் கலைத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் தேன் உற்பத்தி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனீ வளா்ப்பு மூலம் தேன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேசிய தேனீ வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சிகள், மானியத்தில் உபகரணங்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பு ஆண்டு 25 சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளா்ப்புப் பயிற்சி அளிக்க தோட்டக் கலைத் துறையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி கூறியதாவது: தேன் மருத்துவ குணம் உடைய பொருள் என்பதால் தேவை அதிகளவில் உள்ளது. இயற்கையில் தேன் உற்பத்தி மிக குறைவாகவே கிடைக்கிறது. இதனால், நுகா்வோரின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தோட்டங்களில் பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தேனீ வளா்ப்பு மூலம் தேன் கிடைப்பது மட்டுமில்லாமல் அயல் மகரந்தசோ்க்கை அதிகரித்து மகசூலும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் தேசிய தேனீ வாரியம், தேனீ வளா்ப்பு இயக்கம் மூலம் விவசாயிகளிடையே தேனீ வளா்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மகளிா் சுய உதவிக் குழுக்களிடையே தேனீ வளா்ப்பைக் கொண்டு சோ்க்கும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளா்ப்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல்கட்டமாக 25 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிா் சுய உதவிக் குழுவினா் தேன் உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT