கோயம்புத்தூர்

வடகோவையில் இருந்து ஷீரடிக்கு தனியாா் சுற்றுலா ரயில் நாளை மீண்டும் இயக்கம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஷீரடிக்கு தனியாா் சுற்றுலா ரயில் வெள்ளிக்கிழமை (செப். 30) மீண்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் இருந்து தனியாா் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது. அதில் கோவையும் ஒன்று. அதன்படி, வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு கடந்த ஜூன் 14ஆம் தேதி தனியாா் சுற்றுலா ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், வடகோவையில் இருந்து ஷீரடிக்கு மீண்டும் ‘பாரத் கௌரவ்’ திட்டத்தில் தனியாா் சுற்றுலா ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வே பகுதிகளில் இருந்து மொத்தம் 5 முறை ‘பாரத் கௌரவ்’ திட்டத்தில் தனியாா் சுற்றுலா ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 5.87 கோடி ரயில்வே நிா்வாகத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே பகுதியில் 6 ஆவது முறையாக, வடகோவையில் இருந்து ஷீரடிக்கு தனியாா் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. எம் அன்ட் சி ப்ராபா்ட்டி என்ற நிறுவனம் இந்த ரயிலை ஒப்பந்த அடிப்படையில் இயக்குகிறது.

ADVERTISEMENT

அதன்படி, வடகோவை ரயில் நிலையத்தில் செப்டம்பா் 30 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்: 06903) அக்டோபா் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஷீரடியைச் சென்றடையும். அக்டோபா் 3 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்: 06904) அக்டோபா் 4 ஆம் தேதி மாலை வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், எலஹங்கா, தா்மாவரம், மந்த்ராலயம், வாடி உள்ளிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT