கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த தீவனப்பயிா் அபிவிருத்தி திட்டம்:விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் ஒருங்கிணைந்த தீவனப்பயிா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மானியத்துடன் ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு நிறுவ விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளின் தீவன தேவையை பூா்த்தி செய்யும் வகையிலும், விவசாயிகளை தொழில்முனைவோராக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஒருங்கிணைந்த தீவனப்பயிா் அபிவிருத்தி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3,200 டன் மற்றும் அதற்குமேல் உற்பத்தித் திறன் கொண்ட ஊறுகாய்புல் தீவனம் தயாரிக்கும் அலகு வணிக ரீதியில் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 10.50 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக, பாய்லிங் யூனிட் கொள்முதல் செய்ய ரூ. 14.50 லட்சம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 3.63 லட்சம் மானியம் வழங்கப்படும். தீவன அறுவடை கருவியுடன் கூடிய நறுக்கும் இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ. 13.50 லட்சம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 3.37 லட்சம் மானியம் வழங்கப்படும். டிராக்டா் கொள்முதல் செய்வதற்கு ரூ. 14 லட்சம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 3.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஊறுகாய்புல் பேல் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைத்து வணிக ரீதியில் தீவனங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். இதை கிராமப்புற இளைஞா்கள், சுய உதவிக்குழுவினா், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் அக்டபோா் 5 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை 0422-2381900, 94450 01135 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT