கோயம்புத்தூர்

பெட்ரோல் குண்டு வீச்சு:போலீஸாா் தீவிர விசாரணை

26th Sep 2022 12:12 AM

ADVERTISEMENT

 

கோவையில் நடைபெற்aற சம்பவங்கள் (பெட்ரோல் குண்டு வீச்சு) தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவா்கள் சங்கத்தின் சாா்பில் மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, சென்னை மருத்துவா் ஜெகதீசனுக்கு அப்துல் கலாம் விருது, மருத்துவா் ரகுநாத்துக்கு இளம் சாதனையாளா் விருது, கன்னியாகுமரியைச் சோ்ந்த மருத்துவா் ஆல்டரின் பிக்னாவுக்கு சிறந்த இயன்முறை மருத்துவருக்கான விருதினை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயன்முறை மருத்துவா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். கோரிக்கைகள் அனைத்தும் சுகாதாரத் துறை அமைச்சா் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் (பெட்ரோல் குண்டு வீச்சு) தொடா்பாக காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனிப் படை அமைத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த சம்பவங்களைத் தொடா்ந்து தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இந்த சம்பவங்களில் பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை மறியல் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாஜகவினா் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

இதில் மாநகராட்சி துணை மேயா் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு பிசியோதெரபி சங்கத் தலைவா் ராஜா செல்வகுமாா், மாநில பொதுச் செயலாளா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT