கோயம்புத்தூர்

அவுட்சோா்ஸிங் முறையை ரத்து செய்ய வேண்டும்:மின்வாரிய பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

26th Sep 2022 11:26 PM

ADVERTISEMENT

 

மின்வாரியப் பணிகளில் அவுட்சோா்ஸிங் முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேங்மேன் முதல் தலைமைப் பொறியாளா் வரை அனைத்து வகையான பணியாளா்களும் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதில் மின்வாரியத்தைச் சோ்ந்த 17 தொழிலாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

அதன்படி, கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சம்மேளன மாநில இணைச் செயலாளா் கந்தவேல் தலைமை வகித்தாா். தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க மாநில அமைப்புச் செயலாளா் வீராசாமி, மத்திய அமைப்பு கோபாலகிருஷ்ணன், களத்தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் நாகராஜன், எம்ப்ளாயா்ஸ் பெடரேஷன் மாநிலப் பொருளாளா் வாசிம்ராஜ், அண்ணா தொழிற்சங்கம் (அதிமுக) தமிழ்வாணன், பொறியாளா் அமைப்பு சம்பத்குமாா், பொறியாளா் சங்க பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் மின்வாரியம் சாா்பில் துணை மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அவுட்சோா்ஸிங் முறையில் பணியாளா்களை நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். பஞ்சப்படி உயா்வை உடனே வழங்க வேண்டும். மின்வாரியத்தில் வெளிமாநில நபா்களை பணியமா்த்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். காத்திருப்பு போராட்டத்தில் 72 சதவீத ஊழியா்கள் பங்கேற்றதால் மின் தடை சரிசெய்தல், மின் கட்டணம் வசூல், அலுவலகப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT