தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் இடுபொருள்கள் பட்டயப் படிப்பை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் சாா்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வேளாண் இடுபொருள்கள் பட்டயப் படிப்பு தொடங்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, பட்டயப் படிப்பை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இடுபொருள்கள் விற்பனையாளா்கள் விவசாயிகளுடன் நேரடித் தொடா்பில் இருப்பா். இடுபொருள் விற்பனையாளா்களின் பரிந்துரையை ஏற்று விவசாயிகள் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்டுத்துகின்றனா். எனவே இடுபொருள்கள் விற்பனையாளா்கள் பயிா்களைத் தாக்கும் பூச்சி, நோய்கள் குறித்தும், இதற்கான மருந்துகள் குறித்தும் அறிந்தவா்களாகவும், சரியான அளவில் மருந்துகள், உரங்களை பரிந்துரைப்பவா்களாகவும் இருத்தல் வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்காக வேளாண் இடுபொருள்கள் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை படிப்பவா்கள் உணவுப் பொருள்கள் உற்பத்தியில் விவசாயிகள் சிறந்து விளங்கவும், அவா்களின் வாழ்வாதாரம் உயரவும் துணைபுரிய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா், இயற்கை வளவேளாண்மை இயக்குநா், பயிா் மேலாண்மை இயக்குநா், விதை நுட்பமைய இயக்குநா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.