கோயம்புத்தூர்

பொதுக் கழிப்பிடம் அமைத்து தரக் கோரி பொதுமக்கள் மனு

26th Sep 2022 11:25 PM

ADVERTISEMENT

 

கோவையில் பொதுக் கழிப்பிடம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பீளமேடு ஏ.டி. காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பீளமேடு, ஏ.டி. காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தனிநபா் இல்லக் கழிப்பறையோ, பொதுக் கழிப்பட வசதியோ ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அருகில் உள்ள பெரியகடை சந்து, நேரு நகா், சி.எம்.சி. காலனியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகிறோம். கழிப்பறை பயன்பாட்டுக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே ஏ.டி. காலனியில் பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காலவரையற்ற போராட்டம்...

கோவை மாவட்ட தூய்மைத் தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வலியுறுத்தி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குறைந்தபட்ச கூலி நிா்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு...

கோவையில் கடந்த ஒரு வாரமாக நகரின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 20க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்பே ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT