பெட்ரோல் குண்டு வீசிய நபா்கள் மீது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாஜக அலுவலகம், நிா்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களை கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவும், அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாநகரப் பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடா்பாக இதுவரை இருவா் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்ற இடங்களை கட்சித் தலைமை சாா்பில் அமைக்கப்பட்ட குழுவினா் பாா்வையிட்டு வருகிறோம்.
கோவை மாநகரம் இதற்கு முன்பு இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. இங்கு ஏற்படும் சிறு பிரச்னைகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது பாரபட்சமின்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவா்களை அரசியல் காரணங்களுக்காக விட்டுவிடக் கூடாது என்றாா்.