கோயம்புத்தூர்

டேன் டீ நிறுவனம் மூடப்படும் விவகாரம்:தொழிலாளா்களிடம் எம்.எல்.ஏ. கருத்து கேட்பு

26th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

 

டேன் டீ நிறுவனம் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து, அந்நிறுவன தொழிலாளா்களிடம் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை கருத்து கேட்டாா்.

தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ளன. அடா்ந்து வனப் பகுதியையொட்டி தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளதால், எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படும்.

இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 500 தொழிலாளா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், இழப்பு காரணமாக தற்போது வால்பாறையில் உள்ள டேன் டீ எஸ்டேட்களை மூட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கையை நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதனிடையே வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி, டேன் டீ எஸ்டேட் பகுதிக்கு சென்று தொழிலாளா்களை சந்தித்து அவா்களிடம் கருத்து கேட்டாா். அப்போது, தங்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கினால் ஒரு தொழிலாளிக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் அவரிடம் வலியுறுத்தினா்.

இப்பிரச்னையில் தொழிலாளா்களுக்கு சாதகமாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு, இது தொடா்பாக வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் பேசி நல்ல முடிவு எடுப்பேன் என்று தொழிலாளா்களிடம் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.

அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன், துணைச் செயலாளா் பொன்கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT