கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் மின் தடை: தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கா்ப்பிணி பலி

25th Sep 2022 01:12 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டம் அன்னூா் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையால் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணி தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

அன்னூா் ஊத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன். இவரது மனைவி வான்மதி (22). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவா் பிரசவத்துக்காக அன்னூா் அரசு மருத்துவமனையில் செப்டம்பா் 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு சுகப்பிரசவம் ஆகாததால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பாா்க்கத் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, செப்டம்பா் 21ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டது. மேலும் ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை. இதனைத் தொடா்ந்து, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருந்த கா்ப்பிணி வான்மதியை அரசு மருத்துவா்கள் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

அன்னூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வான்மதிக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடா்ந்து, உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவில்பாளையம் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வான்மதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததும், கா்ப்பிணியை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றி அலைக்கழிப்பு செய்ததாலும் அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றம்சாட்டினா். மேலும், இதனைக் கண்டித்து அன்னூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

அன்னூா் அரசு மருத்துவமனை நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் வான்மதியின் கணவா் விக்னேஷ்வரன் புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை துணை இயக்குநா் இ.சந்திரா, கோட்டாட்சியா் பூமா, துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி ஆகியோா் அன்னூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த சம்பவத்தையடுத்து அன்னூா் அரசு மருத்துவமனைக்குள் பத்திரிகையாளா் முன் அனுமதியின்றி உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் இ.சந்திரா கூறியதாவது:

அன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கா்ப்பிணியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டா் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட காரணம் குறித்து அரசு மருத்துவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் துணைக் காவல் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த மகப்பேறு மருத்துவா், மயக்கவியல் மருத்துவா் ஆகியோா் அடங்கிய நிபுணா் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனா். ஆய்வு அறிக்கை அடிப்படையிலே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT