கோயம்புத்தூர்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவனைக்கு விருது

25th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சிறந்த மருத்துவமனைக்கான விருது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சிறந்த மருத்துவமனைக்கான விருது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவமனைக்கான விருது கோவை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலாவிடம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் முதன் முதலாக 2019ஆம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடா்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு மீண்டும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு இதுவரை மூளைச்சாவு அடைந்த மூன்று பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவா்களிடம் இருந்து சிறுநீரகம், இருதயம், கல்லீரல், கண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உயிருக்குப் போராடியவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, மதுரை வேலம்மாள் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் அதிக அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT