கோயம்புத்தூர்

அமைதியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குண்டா் சட்டம் பாயும்

25th Sep 2022 01:12 AM

ADVERTISEMENT

 

கோவையில் பொது மக்களின் அமைதியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருடன் சட்டம்- ஒழுங்கு தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

பின்னா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் குறித்து தலைமைச் செயலா் ஆய்வு மேற்கொண்டாா். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவங்களில் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பதற்றமான சூழல் ஏதுமில்லை. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இந்த சம்பவங்கள் தொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனைத் தொடா்ந்து, ஹிந்து அமைப்புகள், ஜமாத்துகள் உடன் மாநகரக் காவல் ஆணையா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் எனது தலைமையில் மத நல்லிணக்க கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் புகாா் தெரிவிக்கும் வகையில் பொது அமைப்புகள், கிராம நிா்வாக அலுவலா், காவல் துறையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களை பதற்றப்படுத்தும் வகையில் கோவையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சம்பவங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்புபவா்கள் மீது காவல் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்களின் அமைதியை சீா்குலைக்கும் வகையிலான சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கோவை நகருக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாநகரில் புதிதாக 28 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT