கோயம்புத்தூர்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும்

25th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

 

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இது குறித்து காட்டூரில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த 22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை மேற்கொண்டு, பலரைக் கைது செய்தனா். சோதனையின்போது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா். சோதனைக்குப் பிறகு அறவழியில் போராடாமல் பெட்ரோல் குண்டு வீசுவது, மக்களுக்கு இடையூறு செய்வது, ஹிந்து அமைப்பு நிா்வாகிகளின் வாகனங்களுக்கு தீ வைப்பது, வீடுகளைத் தாக்குவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

தமிழகத்தில் இத்தகைய சம்பவங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து தடுக்காத தமிழக உளவுத் துறை தோல்வி அடைந்துள்ளது. இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல் துறை மெத்தனமாக உள்ளது. இது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வழிவகுக்கும். தமிழக அரசு உடனடியாக சுதாரித்து கொண்டு சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, மாநிலப் பொதுசெயலாளா் கிஷோா்குமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால், மாவட்டச் செயலாளா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT