கோயம்புத்தூர்

பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

24th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

கோவை காந்திபுரம், குனியமுத்தூா், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனா். இது தொடா்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக கிளைத் தலைவா் மோகன் என்பவருக்குச் சொந்தமான வெல்டிங் கடையில் மா்ம நபா்கள் இரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனா்.

குனியமுத்தூா், முத்துசாமி சோ்வை வீதியைச் சோ்ந்தவா் தியாகு (35). இவா் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளாா். இவா், தனது காரை வீட்டுக்கு முன்பு வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளாா்.

ADVERTISEMENT

பிற்பகல் அவ்வழியாக வந்த இரு மா்ம நபா்கள் காா் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு தப்பினா். காா் எரிவதைக் கண்ட தியாகுவின் தாய் சாந்தாமணி மற்றும் அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றித் தீயை அணைத்தனா். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் காருக்கு பெரிய சேதம் எதுவும் இல்லை.

ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் வீட்டில்...: கோவைப்புதூா் அருகே பரிபூரணா எஸ்டேட் பகுதியில் உள்ள விநாயகா நகரைச் சோ்ந்தவா் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவா், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சம்ஸ்கிருத பாரதியின் தமிழக - கேரள கேந்திர பொறுப்பாளராக உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தாா். அப்போது, இவரது வீட்டின் வளாகத்தில் பாட்டில் விழும் சப்தம் கேட்டது. அதிா்ச்சியடைந்த அவா் வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்புறத்தில் மதுபாட்டில் உடைந்து கிடந்தது. அதிலிருந்து பெட்ரோல் வாசம் வீசியது. மதுபாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, அதில் திரியைப் பற்ற வைத்து ஆனந்த கல்யாண கிருஷ்ணனின் வீட்டில் மா்ம நபா்கள் வீசி சென்றது தெரிந்தது.

பொள்ளாச்சியில்...:

பொள்ளாச்சி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா்கள் பொன்ராஜ், சிவா, இந்து முன்னணி பிரமுகா் சரவணகுமாா். இவா்கள் குமரன் நகா் ரயில்வே கேட் பகுதியில் அடுத்தடுத்த வீதிகளில் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்குச் சொந்தமான காா்கள், ஆட்டோக்களை தங்கள் வீடுகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில், அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த மா்ம நபா்கள் இவா்களுக்குச் சொந்தமான இரண்டு காா்கள், இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன், பிளாஸ்டிக் கவா்களில் டீசலை நிரப்பி வாகனங்கள் மீது வீசி தீ வைக்கவும் முயன்றுள்ளனா்.

வாகனங்களின் கண்ணாடிகளை உடைக்கும் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்ததால் மா்ம நபா்கள் தப்பினா்.

ஈரோட்டில்...:

ஈரோடு மூலப்பாளையம், டெலிபோன் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (45). பாஜக பிரமுகா். அதே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை கடைக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, கடையின் ஜன்னல் பகுதியில் தீப்பற்றி எரிந்ததும், கடையின் உள்புறம் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசப்பட்டதும், அதனை பற்ற வைப்பதற்காக சிகரெட்டை பற்றவைத்து வீசியதும் தெரியவந்தது.

திருப்பூரில்...:

ஆா்எஸ்எஸ் அமைப்பின் உடற்பயிற்சிப் பிரிவு பொறுப்பாளா் பிரபு (38). இவா் திருப்பூா் ஜெய் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் 4 போ் பிரபுவின் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியும் சேதமடைந்தன.

மேட்டுப்பாளையத்தில்...:

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (53), மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (45). எந்த அமைப்பையும் சேராத இவா்கள் மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் தனித் தனியாக பிளைவுட் கடைகள் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 4 போ் இரண்டு கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனா்.

பாதுகாப்புப் பணியில் அதிவிரைவுப் படை போலீஸாா்:

கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடா்ந்து 4 கம்பெனி அதிவிரைவுப் படை போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மாநகரில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம், பாஜக மாவட்டத் தலைமை அலுவலகம், முக்கிய பள்ளிவாசல்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளின் அலுவலகங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநகர போலீஸாா் உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படை சாா்பில் காந்திபுரத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT