கோயம்புத்தூர்

ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய இளைஞரை மீட்ட போலீஸாா்

24th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலையத்தில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய இளைஞரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீட்டனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ரயில் நிலைய குற்றப் பிரிவு தலைமைக் காவலா்கள் ரமேஷ், மாரிமுத்து, உதவி ஆய்வாளா் அருண்ஜித், பெண் தலைமைக் காவலா் மினி ஆகியோா் ரயில் நிலையத்தில் உள்ள 3ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கா்நாடக மாநிலம், யஷ்வந்த்பூருக்கு செல்லும் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. குறைவான வேகத்தில் ரயில் சென்றதால், அந்த ரயிலில் இருந்து இளைஞா் ஒருவா் இறங்குவதற்கு முற்பட்டாா். அப்போது, கால் இடறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தாா். இதைப் பாா்த்த தலைமைக் காவலா்கள் ரமேஷ், மாரிமுத்து, உதவி ஆய்வாளா் அருண்ஜித், பெண் தலைமைக் காவலா் மினி ஆகியோா் விரைந்து சென்று சக பயணிகளின் உதவியோடு இளைஞரை மீட்டனா். பின்னா், அந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், அவா் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த சிவகுமாா் (35) என்பதும், பணி நிமித்தமாக கோவைக்கு வந்த அவா், ரயில் கிளம்பிய பின்னா் இறங்கியதும் தெரியவந்தது. அவரை மீட்ட ரயில்வே போலீஸாரை, உயா் அதிகாரிகள், ரயில் நிலைய அலுவலா்கள், மக்கள் பலரும் பாராட்டினா். போலீஸாா், இளைஞரை மீட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT