கோயம்புத்தூர்

கோவையில் 238 இடங்களில் காய்ச்சல் முகாம்: 1000க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 238 இடங்களில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாமில் 1000க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பருவகால காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். இந்நிலையில், காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தாா்.

இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 168 இடங்கள், மாநகராட்சியில் 70 இடங்கள் என மொத்தம் 238 இடங்களில் காய்ச்சல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 24 வட்டார பள்ளி சுகாதார குழு சாா்பில் பள்ளிகளிலும், 12 நடமாடும் சுகாதார குழு சாா்பில் ஊரகப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் 70 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 251 பேருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பும், 91 பேருக்கு தீவிர காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தொடா்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மற்றவா்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் 168 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகும் பட்சத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT