கோயம்புத்தூர்

கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

20th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

வால்பாறையில் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த எஸ்டேட் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், கரடியைப் படிக்க வனத் துறை சாா்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிஷன் பகுதியைச் சோ்ந்தவா் தங்கம் (52). இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பணியாற்றி வரும் இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளன. இவா் தினந்தோறும் மாலையில் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு பால் விநியோகித்து வருகிறாா்.

இந்நிலையில், மேல் டிவிஷன் பகுதியில் பால் விநியோகித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இரண்டு கரடிகள் தங்கத்தை தாக்கியுள்ளன. இதில் கை, நெற்றி மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்த தங்கத்தை, அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு சென்ற வனத் துறையினா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையிலான வனத் துறையினா் கரடியைப் பிடிக்க இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் திங்கள்கிழமை கூண்டு வைத்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT