கோயம்புத்தூர்

ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீா் ஓடையை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

20th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

கோவையில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள மழைநீா் ஓடையை மீட்டுத்தர வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், சூலூா் வட்டம், பீடம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகே மழைநீா் ஓடை இருந்து வந்தது. தற்போது, இந்த ஓடையை தனிநபா் ஒருவா் மண் கொட்டி மூடி வண்டித்தடம் அமைத்துள்ளாா். இந்நிலையில், மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா், வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பில் உள்ள மழைநீா் ஓடையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா...

ADVERTISEMENT

பீளமேடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, பீளமேடு ஏ.டி.காலனி, விளாங்குறிச்சி நேரு நகா் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். தினசரி கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம். அனைவரும் வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறோம். வீட்டு வாடகை, உணவுத் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே அரசு சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

மேலும், கருமத்தம்பட்டியில் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கூடத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தற்கொலை முயற்சி...

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கோவை மாவட்டம், சூலூா் வட்டம் பதுவம்பள்ளியைச் சோ்ந்த ராமசாமி (47) என்ற மாற்றுத் திறனாளி, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் கூறும்போது, வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரிடம் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தேன். இதுவரை அசல், வட்டி என ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளேன். இந்நிலையில், வீட்டுப் பத்திரத்தை திரும்ப கேட்டபோது, மேலும் ரூ.3 லட்சம் கொடுத்தால்தான் பத்திரத்தை தருவேன் என்கிறாா். இது தொடா்பாக ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT