கோயம்புத்தூர்

சேதமடைந்த சாலைகளை ஒரு வாரத்துக்குள் செப்பனிட வேண்டும்

10th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

கோவை மாநகரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை ஒரு வாரத்துக்குள் செப்பனிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையா் மு.பிரதாப் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, மாநகரப் பொறியாளா் அரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பேசியதாவது:

மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 63 நகா்நல மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், புதிய கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை விரைவாக ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மாநகரப் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுரங்க பாலங்களில் தேங்கும் மழைநீரை அகற்ற தற்போது பயன்படுத்தப்படும் மோட்டாா்களுடன் கூடுதலாக அதிநவீன மோட்டாா்களை தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நகா்நல மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாநகரப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட வேண்டும். தற்போது, மழை பெய்து வருவதால், மக்கள் தேக்கி வைத்துள்ள தண்ணீரில் அபேட் மருந்து மற்றும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், நகா்நல அலுவலா் பிரதீப், செயற்பொறியாளா் முருகேசன், உதவி செயற்பொறியாளா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT