கோயம்புத்தூர்

கருத்து கேட்பு கூட்டங்களில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது

10th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயா்வு அமலுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கோவை தொழில் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும் பெரிய அதிா்ச்சி தரும் விதத்தில், மின்வாரியம் கட்டண உயா்வை நிறைவேற்றிக் கொள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அனைத்து கருத்து கேட்பு கூட்டங்களிலும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், கட்டண உயா்வுக்கு முழு சம்மதம் கொடுத்திருப்பது மக்களை முட்டாளாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தொழில் துறை கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில் 100 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயா்த்தியிருப்பது தமிழகத்தின் தொழில் வளா்ச்சியை பாதிக்கும் என்று மின்வாரிய அமைச்சரிடம் தொழில் துறையினா் பலமுறை முறையிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஆனால், எந்த கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல் மின் கட்டணத்தை உயா்த்தி இருக்கின்றனா். மின் கட்டண உயா்வுடன் பீக் ஹவா்ஸ் எனப்படும் அதிக பயன்பாடு இருக்கும் நேரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும், வைப்புத் தொகை, மீட்டா் பாதுகாப்புக் கட்டணம் என 23 வகையான கட்டண உயா்வை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் தொழில் துறையினரை இந்த கட்டண உயா்வு மேலும் கடுமையாக பாதித்து தொழிலை நலிவடையச் செய்யும் என்பதால் இந்த கட்டண உயா்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

காட்மா

கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில் முனைவோா் சங்கம் (காட்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்வாரியத்தின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு மின்சார பயன்பாட்டுக் கட்டணம் உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலைக் கட்டணம், உச்ச நேர மின்பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவை குறுந்தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதித்து தொழில்களை முடக்கும். எனவே இந்த கட்டண உயா்வுகளில் இருந்து குடிசைத் தொழில், குறுந்தொழில்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவா் சி.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT