கோயம்புத்தூர்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தொண்டாமுத்தூா் பகுதிகளையும் இணைக்க வேண்டும்

7th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இரண்டாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அதில் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளை இணைக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளில் உள்ள முக்கியமான முதல் 10 பிரச்னைகள் தொடா்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் கோரிக்கை மனு அளிக்கலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவின் 9 எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் தங்களது தொகுதிகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

இதில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி இரண்டாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதில், முதல் திட்டத்தில் விடுபட்டுள்ள கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளை அதில் இணைக்க வேண்டும்.

சித்திரைச்சாவடி அணையில் இருந்து நரசீபுரம் முதல் உலியம்பாளையம் வரை உள்ள 25 குட்டைகளிலும், நாதேகவுண்டன்புதூா் முதல் ஆறுமுக கவுண்டனூா் வரையிலும் உள்ள 15 குட்டைகளிலும் நீரை சேமிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொண்டாமுத்தூா் தொகுதியில் கிரிக்கெட் மைதானம், பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் 50 ஆண்டு கால வளா்ச்சியை நாங்கள் கொடுத்தோம். திமுக ஆட்சியின் ஒன்றரை ஆண்டு காலத்தில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாநகரில் 10 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் கிடைக்கிறது. சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளன. வெள்ளலூா் பேருந்து நிலையம் திட்டத்தை உள்நோக்கத்துடன் நிறுத்தி வைத்திருக்கின்றனா் என்றாா்.

எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி. அருண்குமாா், தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT