கோயம்புத்தூர்

கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி நியமனம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பங்களாவில் மா்ம கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பல்வேறு ஆவணங்கள், பொருள்களை கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளையடித்துச் சென்றது.

இது தொடா்பாக, ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ், சதீசன், திபு உள்பட 10 போ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தாா். கொடநாடு எஸ்டேட் கண்காணிப்பு கேமரா பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த தினேஷ்குமாா், சந்தேகத்துக்கு உரிய வகையில் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல் துறைக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்குத் தொடா்பாக மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவா் சுதாகா் தலைமையிலான தனிப் படை போலீஸாா், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினா் விவேக், கொடநாடு மேலாளா் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு கடந்த வாரம் உத்தரவிட்டாா். இந்நிலையில், கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வழக்குத் தொடா்பான ஆவணங்கள், அவரிடம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT