கோயம்புத்தூர்

ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மோசடி:நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மோசடி செய்த அதே நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளரை போலீஸாா் கோவையில் புதன்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் ஷாகன்லால் (60). தங்க நகை வியாபாரி. இவா் நகைகளைத் தயாரித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விற்று வருகிறாா். இவரது நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹனுமன் திவேஷி பணியாற்றி வந்தாா்.

இவா், ஆா்டா்களின் பெயரில் கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு ஷாகன்லால் அனுப்பும் நகைகளை ஒப்படைத்து, விற்காத நகைகளை மீண்டும் பெங்களூருவுக்கு அனுப்பிவந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஷாகன்லால், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

அதில், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரை கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15.447 கிலோ தங்க நகைகளை லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால், விற்பனைப் பிரிவு மேலாளரான ஹனுமன் திவேஷி 1.867 கிலோ தங்கத்தை மட்டுமே நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு ரூ.6 கோடி மதிப்பிலான 13.580 கிலோ தங்க நகைகளை முறைப்படி கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளாா். எனவே, அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து ஹனுமன் திவேஷியை தேடி வந்தனா். இந்நிலையில் கோவையில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இவருடன் கூட்டாளியாகச் செயல்பட்டு நகைகளைப் பெற்றுக் கொண்டு தப்பியோடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தல்பிா் சிங்கை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT