கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவு-80 சதவீத பணிகள் நிறைவு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜைகா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) திட்டத்தின்கீழ் ரூ.98 கோடி மதிப்பில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து நடப்பாண்டின் தொடக்கத்தில் ரூ.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 தளங்களுடன் அமைக்கப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 தளங்களுடன் அமைக்கப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது பூச்சு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் தீக்காயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான சிறப்பு உயா் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுகின்றன. தவிர அதிநவீன ஆய்வகங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய வாா்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதன் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு இணையான அனைத்து சிகிச்சைகளும், வசதிகளும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT