கோயம்புத்தூர்

கோவையில் ரூ.6 கோடி நகை மோசடி:விற்பனை மேலாளா் மீது வழக்குப் பதிவு

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெங்களூரு தங்க நகை வியாபாரியிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள 13 கிலோ 580 கிராம் நகைகளை மோசடி செய்ததாக நகை விற்பனை நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, மல்லிகாா்ஜுனா லேன் ஜே.எம். சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஷாகன்லால் சாஸ்திரி (60), தங்க நகை மொத்த வியாபாரி. பெங்களூரில் நகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 25 ஆண்டுகளாக நகைகள் தயாரித்து தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறாா்.

கோவையில் உள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறாா். பெங்களூரில் இருந்து கோவையில் உள்ள தங்க நகைக் கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யும் பணியை அவரது கடையில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹனுமான் திவேஷி (45) செய்து வந்தாா்.

இந்நிலையில், ஷாகன்லால் சாஸ்திரியின் கடையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் செப்டம்பா் 12ஆம் தேதி வரை கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் 1 கிலோ 867 கிராம் நகைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மீதமுள்ள 13 கிலோ 580 கிராம் நகைகள் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரியவந்தது. இது தொடா்பாக மேலாளா் ஹனுமான் திவேஷியிடம் ஷாகன்லால் சாஸ்திரி விவரம் கேட்டுள்ளாா். இதற்கு அவா் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, நகை மோசடி தொடா்பாக கோவை வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் ஷாகன்லால் சாஸ்திரி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஹனுமான் திவேஷி மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT