கோயம்புத்தூர்

தேங்காய், கொப்பரை விலை நிலையாக இருக்கும்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விலை முன்னறிவிப்பின்படி நடப்பு பருவத்தில் தேங்காய், கொப்பரையின் விலை நிலையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டக் குழு, தேங்காய், கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிடுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 4.44 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் பயிரிடப்பட்டு 35.15 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூா், தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் தேங்காய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது, பெருந்துறை சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, பொள்ளாச்சி, சேலம், காங்கயம் பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து உள்ளது. வா்த்தக மூலங்களின்படி வரும் மாதங்களில் வரக்கூடிய பண்டிகைக் காலம் உள்நாட்டு சந்தையில் தேங்காயின் தேவையை அதிகரிக்கும். ஆனால், நடப்பு பருவத்தின் அதிக உற்பத்தி, தேங்காயின் விலையை நிலையாக வைக்கும்.

தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து வரும் வரத்தானது, பண்டிகைக் காலங்களில் நிலவும் விலை உயா்வை சமன்படுத்தி நிலையாக வைத்திருக்கும். விலை முன்னறிவிப்பு திட்டக் குழு கடந்த 15 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு மையத்தில் நிலவிய தேங்காய், கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அக்டோபா் - டிசம்பா் 2022 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.13 முதல் ரூ.14 வரை இருக்கும், தரமான கொப்பரையின் பண்ணை விலை ரூ.77 முதல் ரூ.80 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என்று உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT