கோயம்புத்தூர்

கழிவுகளை அகற்றுவது தொடா்பான கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த கோரிக்கை

1st Oct 2022 05:17 AM

ADVERTISEMENT

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் கோவை மணியரசு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: மனிதக் கழிவை மனிதனே அகற்றும் தடைச் சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில், மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், கிராம பஞ்சாயத்து செயலா்கள் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்கள், கட்சி சாராத சமூகப் பணியாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா். இக்குழுவின் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் நலன் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விவாதிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் போதிய கவனம் செலுத்தாத காரணத்தினால், இக்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இக்கூட்டத்தைக் கூட்டி, கோவை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் நலன் காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT