கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

1st Oct 2022 05:17 AM

ADVERTISEMENT

போனஸ் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணி, திடக்கழிவு மேலாண்மை, ஓட்டுநா் மற்றும் சுகாதாரப் பணிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.323 வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இவா்களுக்கு ஊதிய உயா்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லையாம். தற்காலிக தொழிலாளா்களுக்கு முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கக் கோரி, தொடா்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகத் தொழிலாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் போனஸாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், செல்வராஜ், மணியரசு, தமிழ்நாடு செல்வம் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

இது குறித்து தூய்மைப் பணியாளா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் கூறியதாவது: தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிா்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பலமுறை பேச்சு வாா்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT