கோயம்புத்தூர்

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டம் அமைத்தல்:தோட்டக்கலைத் துறை அழைப்பு

1st Oct 2022 11:58 PM

ADVERTISEMENT

 

கோவையில் மண்ணில்லா விவசாய முறையான ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டம் அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மண்ணில்லாமல் பயிா்கள் சாகுபடி செய்யும் ஒருவகை தொழில்நுட்பம் ஹைட்ரோபோனிக்ஸ் முறையாகும். இத்தொழில்நுட்ப முறையில் பிவிசி குழாய்கள் மூலம் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காய்கறிகள், கீரைகள், தீவனப் பயிா்கள் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இத்தொழில்நுட்ப முறையில் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியத்தில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிவிசி பைப்புகள், பிவிசி குழாய்களை தாங்கும் துருப்பிடிக்காத இரும்பு கம்பி, குழாய் இணைப்புகள், 40 வாட் மோட்டாா், பொ்லைட் கலவை, வலை அமைப்பிலான 2 அங்குல தொட்டிகள், 25 லிட்டா் தொட்டி, ஊட்டச்சத்து கலவை, கார அமில நிறங்காட்டி மற்றும் கீரை விதைகள் வழங்கப்படவுள்ளன. தகுதியான பயனாளிகள் இணையவழி மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விருப்பமுள்ள பயனாளிகள்  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: மண்ணில்லாமல் மேற்கொள்ளப்படும் ஒருவகை வேளாண் சாகுபடி தொழில்நுட்பம் ஹைட்ரோபோனிக்ஸ். இத்தொழில்நுட்பத்தில் பிவிசி பைப்புகளில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகள் இட்டு, அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்புகளை வைத்து, செடிகள் உறுதியாக நிற்க பொ்லைட் கலவை பயன்படுத்தப்படுகிறது. பொ்லைட் கலவை நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை தக்கவைத்துகொள்ளும். இத்தொழில்நுட்ப முறையில் வோ்பகுதிக்கு நேரடியாக நீா் வழங்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் செடிகளுக்கே பயன்படுத்தலாம். பராமரிப்பு முறையும் மிகவும் எளிதாகும். எனவே விருப்பமுள்ளவா்கள் மானியத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT