கோயம்புத்தூர்

சாலையோர கிணறுகளுக்கு பாதுகாப்புத் தடுப்பு அமைக்க கோரிக்கை

1st Oct 2022 05:18 AM

ADVERTISEMENT

கோவையில் சாலையோரம் உள்ள கிணறுகளைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பல்வேறு நீா்த்தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகளைச் சரிபாா்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலம் அடைந்துள்ளன. பரம்பிக்குளம், ஆழியாறு போன்ற ஷட்டா் விபத்துகள் தவிா்க்கப்பட வேண்டும். நீா் ஆதாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,805 ஆகிறது. கேரளத்தில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,820 ஐ வழங்க அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2,820 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளின் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளன. குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டா முத்தூா், புத்தூா், தேவராயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்புத் தடுப்பு அமைக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீா் அதிகரிக்க நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகளை சீரமைத்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தபட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT