கோயம்புத்தூர்

கோவையில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

30th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

கோவையில், சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் ராஜா (தாம்பரம் தொகுதி) தலைமையில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் குழு உறுப்பினா்கள் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் ஹோப்காலேஜ் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா, சௌரிபாளையம் பிரிவில் உள்ள அத்வைத் நூற்பாலை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி காற்றாலை நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நிறுவனம், செல்வபுரம் புதிய துணைமின் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் ராஜா தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் ராஜா எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழர சட்டப் பேரவையால் அமைக்கப்பட்டுள்ள பொது நிறுவனங்கள் குழுவானது தலைமை கணக்கு தணிக்கையாளரால் கொடுக்கப்பட்டுள்ள தணிக்கை பத்திகள் குறித்து ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை , நீலகிரி மாவட்டங்களில் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ள பத்திகளை செவ்வாய், புதன்கிழமைகளில் நேரடியாகப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, சமூக திட்டத்தின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், வருவாய்த் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு மின்மோட்டாா் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம், தாட்கோ சாா்பில் 3 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.5.74 லட்சம் மானியம், 4 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்கிட ரூ.10 லட்சம் மானியம், 3 பயனாளிகளுக்கு வாகனங்கள் வாங்க ரூ.5.05 லட்சம் மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் ராஜா வழங்கினாா்.

இதில் குழு உறுப்பினா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களான அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), அருண்மொழித்தேவன் (புவனகிரி), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), சேகா் (பெரம்பூா்), தமிழரசி (மானாமதுரை), பாலாஜி (திருப்போரூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT