கோயம்புத்தூர்

சித்தாபுதூா் பகுதியில் காவல் துறை உதவியுடன் சேதமடைந்த கட்டடம் காவல் சிறுவா் மன்றமாக புதுப்பிப்பு

30th Nov 2022 12:31 AM

ADVERTISEMENT

கோவை சித்தாபுதூா் பகுதியில் சேதமடைந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டு காவல் சிறுவா், சிறுமியா் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சித்தாபுதூா் தனலட்சுமி நகரில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சேதமடைந்த நிலையில் எவ்வித பயன்பாட்டிலும் இல்லாமல் சுற்றிலும் புதா்கள் மண்டிய நிலையில் பழைய கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது.

இந்த கட்டடம் குறித்த விவரம் அறிந்தவுடன் கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தன்னாா்வலா்கள், பொதுநல விரும்பிகள், நன்கொடையாளா்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சேதமடைந்த கட்டடத்தை சீரமைத்து, அதை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு ஏற்றவாறு உருவாக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா்.

இதையடுத்து காட்டூா் காவல் உதவி ஆணையா் வின்சென்ட் தலைமையில் நன்கொடையாளா்கள் பங்களிப்புடன் அந்த கட்டடத்தை சுற்றியிருந்த புதா் மண்டிய பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, சிதிலமடைந்த கட்டடம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் தனலட்சுமி நகரில் உள்ள பள்ளி செல்வோா் மாலை வேளைகளில் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கும், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக பேணுவதற்கும், தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை தவிா்ப்பதையும் அடிப்படை நோக்கமாக கொண்டு காவல் சிறுவா், சிறுமியா் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இம்மன்றத்தில் மாலை நேரங்களில் அமா்ந்து படிப்பதற்கு இருக்கைகளும், ஆசிரியா்கள் அல்லது பயிற்றுநா்களுக்காக கரும்பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்ட புத்தக அலமாரியும், 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தினந்தோறும் பயிற்சி வகுப்புகளுக்கும், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் திறனுள்ள காவல் அதிகாரிகளை கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மன்றத்துக்கு வெளியே அனைத்து வயதினருக்குமான விளையாட்டு மைதானமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காவல் சிறுவா், சிறுமியா் மன்றத்தை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையா் வின்சென்ட், ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய ஆய்வாளா் பழனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT