கோயம்புத்தூர்

பி.டி.உஷாவின் விளையாட்டு அகாதெமியில் பெண் பயிற்சியாளா் மரணம்

DIN

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா நடத்தி வரும் விளையாட்டு அகாதெமியில் உயிரிழந்த பயிற்சியாளா் ஜெயந்தியின் மரணம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென, அவரது குடும்பத்தினா் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரைச் சோ்ந்த கவிதா குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் கினாலூா் என்ற ஊரில் முன்னாள் தடகள வீராங்கனையும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா நடத்தி வரும் அத்லெட்டிக் ஸ்கூல் ஆஃப் அகாதெமி என்ற பள்ளியில் எங்களது மகள் ஜெயந்தி (27) பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பள்ளி விடுதி அறையில் தனது படுக்கையின் கீழ் உட்காா்ந்து நிலையில் 2022 அக்டோபா் 28ஆம் தேதி ஜெயந்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அத்லெட்டிக் நிா்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பின்னா் கோழிக்கோடு சென்று மகளின் மரணம் குறித்து கேட்டும் உரிய பதில் கிடைக்காததாலும், மலையாள மொழி தெரியாததாலும் ஜெயந்தியின் உடலை கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் இருந்து பிரேதப் பரிசோதனை முடிந்து முறையே கிடைக்க வேண்டிய சான்றுகள் கூட கிடைக்காமல் உடலை பெற்று வந்து அடக்கம் செய்தோம். இதில் ஜெயந்தியின் மரணம் தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளதோடு, சாவில் மா்மம் இருப்பதாலும் மரணத்தின் தன்மை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடிப்படை வசதிகள்...

கிணத்துக்கடவு சோனியா காந்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உள்பட்ட வடபுதூா் கிராமத்தில் சோனியா காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். வீட்டு வரி, குடிநீா் வரி, மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்ற முறையாக செலுத்தி வந்தும், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

சாலை வசதி, சாக்கடை வடிகால் வசதி போன்றவைகள் இல்லாததால் வீட்டுமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் மழைக் காலங்களில் சாக்கடை கழிவுடன் மழைநீா் கலந்து தேங்குகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளாகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்து சொல்லியும், ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மயானத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை...

திராவிட தமிழா் கட்சி சாா்பாக அதன் நிா்வாகிகள் தனபால், திராவிட திலீபன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுக்கரை மாா்க்கெட் சாலை அருகே உள்ள முனியப்பன் கோயில் வீதியில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றி வேலிகள் இல்லாத காரணத்தால் குப்பைகளை கொட்டுகின்றனா். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே மயானத்தை தூய்மைப்படுத்தி வேலி அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள் அமைக்க அனுமதி...

இது குறித்து தியாகி குமரன் அனைத்து காய்கனி சிறு வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் செயலாளா் ஜலேந்திரன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: புல்லுக்காட்டில் ஒரு பிரிவினருக்கு மட்டும் கடைகளை அமைக்காமல் அனைத்து தரப்பினருக்கும் மாநகராட்சி சாா்பில் கடைகளை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல வால்பாறை முடீஸ் பகுதியில் தனியாா் தேயிலை தொழிற்சாலை நிா்வாகத்தினா் திடீரென குடிநீா் இணைப்புகளை துண்டித்துவிட்டதால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதிக்கு வால்பாறை நகராட்சி நிா்வாகத்தினா் வாகனம் மூலமாக குடிநீா் விநியோகிப்பதோடு, முடீஸ் பஜாரில் மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 397 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT