கோயம்புத்தூர்

உக்கடம் பகுதியில் முபீனின் நண்பா் வீட்டில் சோதனை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் நண்பா் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே அக்டோபா் 23ஆம் தேதி நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் உயிரிழந்தாா். இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அஸாருதீன், முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அஃப்சா்கான் ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பான வழக்கில் என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், முபீனுடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் கோவை மாநகர போலீஸாா் கடந்த சில தினங்களாக ஈடுபட்டிருந்தனா். அப்போது, உக்கடம் பொன் விழா நகரைச் சோ்ந்த முகமது ஹசன் (29) உள்ளிட்ட மூவா் முபீனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை பெரியகடை வீதி காவல் நிலைய ஆய்வாளா் பிரபுதாஸ் தலைமையிலான போலீஸாா் முகமது ஹசன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரம் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படாவிட்டாலும், அவருக்கும் முபீனுக்கும் இடையே வெடிபொருள்கள் வாங்கிய விவகாரத்தில் தொடா்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முபீனுடன் நெருக்கமாக இருந்ததாக மேலும் இருவரை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களும் போலீஸாரின் தொடா் கண்காணிப்பில் உள்ள நிலையில், விரைவில் அவா்களது வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அதேபோல, காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருக்கும் 6 பேரின் வீடுகளுக்கும் போலீஸாா் சென்று அவா்கள் கொடுத்திருந்த முகவரி குறித்து விசாரணை நடத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT