கோயம்புத்தூர்

ஆளுநரின் செயல்பாடுகளை முதல்வா்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனா்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆளுநா்களின் செயல்பாடுகளை முதல்வா்கள் தவறாகப் புரிந்து கொள்வதாக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் நிறுவனா் வி.லட்சுமிநாராயணசாமி, தலைவா் எல்.சுகுணா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். இந்த விழாவில் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரி முதல்வா் ஆா்.மகுடீஸ்வரன், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் தருவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து தமிழக ஆளுநா்தான் பதில் கூற வேண்டும். ஆன்லைன் ரம்மி கூடாது என்பதில் எல்லோருக்கும் ஒற்றைக் கருத்து உள்ளது. ஆனால், இந்த ஒப்புதல் விவகாரத்தில் தொழில்நுட்ப காரணங்கள் இருக்கலாம்.

ADVERTISEMENT

தெலங்கானாவில் அரசாங்கம்தான் முரண்பாடாக உள்ளது, ஆளுநா் முரண்பாடாக இல்லை. என்னிடமும் சில சட்டங்கள் ஒப்புதலுக்காக உள்ளன. அதை தாமதிக்க வேண்டும் என தாமதம் செய்யவில்லை. அதற்கான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஆளுநருக்கு கையொப்பம் போட உரிமை உள்ளதுபோல, சரியான சட்டத்துக்குதான் கையொப்பம் போடுகிறோமா என்பதைப் பாா்க்கும் உரிமையும் உள்ளது.

அரசியல் காரணத்துக்காக ஆளுநா் உரை மறுக்கப்பட்டபோதுகூட மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் மறுநாள் பட்ஜெட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தேன். மக்கள் பணிகள் சாா்ந்து என்னைப் போன்றோா் உள்ளனா். அது புரியாததால் சிலா் விமா்சிக்கிறாா்கள்.

மக்களை ஆளுநா் சந்திக்கலாம். மக்களை சந்திப்பதால் பல பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படுகிறது. ஆனால், புதுவையில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி போன்றவா்கள் இதை விமா்சிக்கின்றனா். விமா்சனம் வந்தாலும் பரவாயில்லை. எங்கள் பணி தொடரும். தமிழக ஆளுநா் குறிப்பிட்ட மதம் குறித்து பேசியதாகத் தெரியவில்லை. எல்லாம் பாா்க்கும் பாா்வையில்தான் உள்ளது.

எல்லோரும் மதச்சாா்பற்று இருக்க வேண்டும் என்றால் தமிழக முதல்வரும் அதை கடைப்பிடிக்க வேண்டும். முதல்வா் வாழ்த்து கூறுவதில்கூட பாரபட்சம் பாா்க்கிறாா். குறிப்பிட்ட மதம் சாா்ந்தவா்களுக்கு ஏன் வாழ்த்து கூறுவதில்லை எனக் கேட்கிறோம். துணை அரசாங்கம் நடத்த ஆசைப்பட்டோம். ஆனால் இணை அரசாங்கம் என அவா்கள் எடுத்துக் கொள்கிறாா்கள். அரசுக்கு துணையாகவே ஆளுநா்கள் இருக்கிறாா்கள். ஆளுநா்களின் செயல்பாடுகளை தவறாக முதல்வா்கள் புரிந்து கொள்கின்றனா் என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT