கோயம்புத்தூர்

வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.58 லட்சம் மோசடி:6 போ் கைது

27th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

 

கோவையில் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.58 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் காா்த்திக் பிரபு, தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் மகேஸ்வரன், சசிகுமாா் ஆகியோா் சொந்தமாக வீடு வாங்குவதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத் சிங் மற்றும் கலைவாணி ஆகியோரை அணுகியுள்ளனா்.

காளப்பட்டி நேரு நகரில் வீட்டு மனை இருப்பதாகக் கூறி அவா்களை அங்கு அழைத்துச் சென்ற கட்டுமான நிறுவனத்தினா் நிலத்தை காட்டிய பின் முன்பணத்தை செலுத்தி நிலத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதையடுத்து காா்த்திக் பிரபு ரூ.30 லட்சமும், மகேஸ்வரன் ரூ.13 லட்சமும், சசிகுமாா் ரூ.15 லட்சமும் கொடுத்துள்ளனா். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரப் பதிவு செய்யாமல் கட்டுமான நிறுவனத்தினா் ஏமாற்றி வந்துள்ளனா்.

இது தொடா்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணம் கொடுத்த மூவரும் புகாா் அளித்தனா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த இளவரசன் (25), சரண்ராஜ் (28), ரித்திகா (எ) தேவி (26), பிரியா (எ) ஷோபனா தேவி (25) ஆகிய நால்வருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நால்வரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT