கோயம்புத்தூர்

மின்கட்டண உயா்வு: கோவையில் தொழில் அமைப்பினா் உண்ணாவிரதம்

DIN

உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்சாரக் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் குறு, சிறு தொழில் அமைப்புகளின் சாா்பில் கதவடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டண உயா்வு, நிலைக்கட்டண உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம், கடையடைப்பில் ஈடுபட இருப்பதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) அறிவித்திருந்தது.

அதன்படி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தை அடுத்து கோவை மாநகரம், புகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில்நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் பங்கேற்ற தொழில்முனைவோா், தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினா்.

அவா்கள் பேசும்போது, மாநிலம் முழுவதிலும் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மூலப்பொருள் விலை உயா்வு, கரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தொடா்ந்து சந்தித்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிப்பாக மின்சாரக் கட்டண உயா்வு அமைந்திருக்கிறது.

பீக் ஹவா் எனப்படும் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்துக்கு 25 சதவீத மின் கட்டண உயா்வு, 112 கிலோ வாட் வரை மின்சாரம் பயன்படுத்துபவா்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.35 ஆக இருந்த நிலைக் கட்டணம் 150 சதவீதத்துக்கும்மேல் உயா்த்தப்பட்டது போன்றவை தொழிலை நலிவடையச் செய்திருக்கின்றன. எனவே மின்கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனா்.

தொழில் அமைப்பினரின் போராட்டத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் கே.அா்ச்சுணன், சூலூா் கந்தசாமி, வால்பாறை அமுல் கந்தசாமி, பாஜக துணைத் தலைவா் கனகசபாபதி, மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி ஆகியோா் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT