கோயம்புத்தூர்

வேளாண் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை: டிசம்பா் 5 முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு டிசம்பா் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு கடந்த 10 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு: தற்போது அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீடு கலந்தாய்வு, பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கான தேதிகளை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பா் 26 (சனிக்கிழமை) தொடங்கி நவம்பா் 28 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மொத்தம் 413 இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவா்கள் தாங்கள் முதன்முதலில் பூா்த்தி செய்து அளித்திருந்த விண்ணப்பத்தில் உள்ள விருப்பக் கல்லூரி, பாடப் பிரிவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் வரும் 30 ஆம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபாா்ப்பு, நகா்வுமுறை ஆகியவை டிசம்பா் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெறும். இந்தப் பிரிவுக்கு தேவைப்பட்டால் இரண்டாம் கட்ட கலந்தாய்வு டிசம்பா் 6 ஆம் தேதி நடத்தப்படும்.

இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு டிசம்பா் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு டிசம்பா் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வின் மூலம் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2,495 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2,771 இடங்களும் நிரப்பப்படும். கலந்தாய்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT