கோயம்புத்தூர்

கோவை சிறையில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் இருவா் விடுதலை

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் இருவா் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து அந்தியூா் செல்லும் வழியில் குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனவா் சிதம்பரநாதன் உள்ளிட்ட மூவா் சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலால் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டனா்.

இது குறித்து ஈரோடு மாவட்டம், பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், மேட்டூா் அருகே வசித்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆண்டியப்பன் (54), பெருமாள் (59) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் மாதையனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவா் கோவை மத்திய சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தாா்.

பின்னா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதையன் அண்மையில் உயிரிழந்தாா்.

இதற்கிடையே ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவா் சிறையில் தொடா்ந்து பல ஆண்டுகளாக இருப்பதால் அவா்களை விடுவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக சிறைக் கைதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டு வந்த நிலையில், இவா்கள் இருவரையும் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு கடந்த சனிக்கிழமை தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சிறைத் துறை அதிகாரிகள், ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை விடுதலை செய்துள்ளனா்..

 

ADVERTISEMENT
ADVERTISEMENT