கோவையில் ஆயுதப்படை காவலா்களுக்கு ட்ரோன் கேமரா செயல்பாடு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை காவலா் பயிற்சி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை மாநகர காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். இதில், ட்ரோன் கேமராக்களை பொது இடங்களில் கையாளுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் எவ்வாறு கையாளுதல் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவையில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையம், சங்கனூா் பள்ளம், நொய்யல் மற்றும் குளங்களை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, இரவு நேரங்களில் நகரின் பிரதான சாலைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்களின் மூலம் கண்காணிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.