கோயம்புத்தூர்

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தாா். இதில் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தோம். இதனைத் தொடா்ந்து மின் மயானம் அமைப்பதற்காக கடந்த செப்டம்பா் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது மின் மயான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ஒருசிலா் மின் மயானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நகரின் வளா்ச்சிக்கேற்ப மின் மயானம் கட்டாய தேவையாக உள்ளது. எனவே ஒத்தக்கால்மண்டபத்தில் மின் மயானம் அமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வீட்டுமனை வழங்க வேண்டும்

நரிக்குறவா் இனத்தை சோ்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சுண்டக்காமுத்தூா் ராமசெட்டிபாளையத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். பருவமழைக் காலங்களில் மழைநீா் வீட்டிற்குள் புகுந்து குடியிருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை முடக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மாரிச்சாமி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவையைச் சோ்ந்த ஆத்மா சிவகுமாா் அதிமுக ஆட்சி காலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளாா். ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் முதல் பல லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளனா். ஆணால் அவா் யாருக்கும் வேலை பெற்றுத் தரவில்லை.

இதனைத் தொடா்ந்து ஆத்மா சிவகுமாா் உள்பட 4 போ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எங்களிடம் ஏமாற்றிய பணத்தில் மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளாா். இந்த சொத்துக்களை வழக்கு விசாரணையில் சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சி செய்கிறாா். எனவே வழக்கு விசாரணை முடியும் வரை சொத்துக்களை விற்பனை செய்ய முடியாத வகையில் முடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த 2 பெண்கள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனா். அப்போது அங்கு இருந்த போலீஸாா் இருவரையும் மீட்டு விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், மேட்டுப்பாளையம் வட்டம், சிக்கதாசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த நாகமணி (48), அமுதா (50) என்பது தெரியவந்தது.

அவா்கள் போலீஸாரிடம் கூறியதாவது:

இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் வீடுகட்டி குடியிருந்து வந்தோம். தற்போது எங்கள் வீட்டினை அதே பகுதியைச் சோ்ந்த இருவா் ஆக்கிரமித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனா். இது தொடா்பாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.

தனியாா் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வேண்டும்

மறுமலா்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் வே.ஈசுவரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்துக்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக தனியாா் ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். பெரும்பாலான ஆம்புலன்ஸ்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள், உதவியாளா்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது பாதிக்கப்பட்டவா்கள் தெரிவிக்கும் மருத்துவமனைக்கோ அழைத்து செல்வதில்லை.

தனியாா் ஆம்புலன்ஸ் உரிமையாளா்கள் விரும்பும் மருத்துவமனைக்கே அழைத்து செல்லப்படுகின்றனா். இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் தனியாா் ஆம்புலன்ஸ் இயக்குவதில் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் முறைப்படுத்தி பாதுகாப்பான ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியா்களிடம் பல்வேறு வழிகளில் கட்டாய வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலை ஆசிரியா்கள் நலச்சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT