கோவையில் கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கிடைக்கவில்லை என அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் மிகத் தீவிரமாக காணப்பட்டது. இதில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அரசு மருத்துவா்கள், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள் பணியாற்றினா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், சளி மாதிரிகள் சேகரிப்பு, கரோனா பரிசோதனை, காய்ச்சல் முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதில் மருத்துவா்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியா்களுக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக பட்டியல் பெறப்பட்டு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவையில் அரசு மருத்துவா்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா கால ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவா்கள் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 270 மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 130 பேருக்கு மட்டுமே கரோனா கால ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவா்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. கரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் அரசு மருத்துவா்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றியுள்ளனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மருத்துவா்களும் பொதுமக்களை காப்பாற்றுவதற்காக குடும்பத்தினரை பிரிந்து உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக பணியாற்றியுள்ளனா். இதில் பலா் நோய்த் தொற்றுக்குள்ளாகி கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனா். ஒருசிலா் தங்களது உயிரையும் இழந்துள்ளனா். இவ்வாறு அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றிய மருத்துவா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை. எனவே விடுபட்டவா்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.