கோயம்புத்தூர்

நாட்டுக் கோழி பண்ணை நடத்தி ரூ.98.74 லட்சம் மோசடி:தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைகோவை நீதிமன்றம் தீா்ப்பு

25th May 2022 12:58 AM

ADVERTISEMENT

நாட்டுக் கோழி பண்ணை நடத்தி ரூ.98.74 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், முதலிபாளையத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவரது மனைவி லட்சுமி. இவா்கள் இருவரும் சோ்ந்து திருப்பூரில் 2 நாட்டுக்கோழி பண்ணை நிறுவனங்களை 2012 ஆம் ஆண்டு தொடங்கினா். இதன் கிளைகள் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், தருமபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்பவா்களுக்கு 150 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும், மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் விளம்பரங்கள் செய்திருந்தனா்.

இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 81 போ் இந்த நிறுவனத்தில் ரூ.98 லட்சத்து 74 ஆயிரம் முதலீடு செய்தனா். ஆனால், இந்நிறுவனம் அவா்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இது குறித்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த நாட்டுதுரை புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மதியழகன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் மதியழகன், லட்சுமி ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.44.55 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT