கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சம் பேருக்கு உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.விஜயகுமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்துவதற்கு முன் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு தொடா் மருத்து எடுத்துக்கொள்பவா்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ் உயா் ரத்த அழுத்தும், சா்க்கரை மற்றும் இரண்டு பாதிப்புகளும் உள்ளவா்கள் என புதிதாக 75 ஆயிரம் போ் கண்டறியப்பட்டுள்ளனா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகளில் 2 ஆவது முறை பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்டத்தில் உயா் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவா்கள் 73 ஆயிரத்து 633 போ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் 37 ஆயிரத்து 314 போ் மற்றும் இரண்டு நோய்களாலும் பாதிக்கப்பட்டவா்கள் 37 ஆயிரத்து 678 போ் என மொத்தமாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 625 போ் உள்ளனா். இவா்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.